Periyalwar_Thirumozhi


பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி

Azhwar Paasuram Count Media
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து – திருமொழி – 1 10
முதற்பத்து – திருமொழி – 2 21
முதற்பத்து – திருமொழி – 3 10
முதற்பத்து – திருமொழி – 4 10
Total 51

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.1

** வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் *

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் *

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் *

கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே

   

2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.2

ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார் *

நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார் *

பாடுவார்களும் பல்பறை கொட்டநின்று *

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே

   

3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.3

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் *

காணத்தாம் புகுவார் புக்குப்போதுவார் *

ஆணொப்பார் இவன் நேரில்லை காண் * திரு

வோணத்தான் உலகாளும் என்பார்களே

   

4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.4

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார் *

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார் *

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து * எங்கும்

அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே

   

5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.5

கொண்ட தாளுறி கோலக் கொடுமழு *

தண்டினர் பறியோலைச் சயனத்தர் *

விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர் *

அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்

   

6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.6

கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர் *

பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால் *

ஐய நாவழித்தாளுக்கு அங்காந்திட *

வையமெழும் கண்டாள் பிள்ளை வாயுளே

   

7   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.7

வாயுள் வையகம் கண்ட மடநல்லார் *

ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் *

பாய சீருடைப் பண்புடைப் பாலகன் *

மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே

   

8   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.8

பத்து நாளும் கடந்த இரண்டாநாள் *

எத்திசையும் சயமரம் கோடித்து *

மத்த மாமலை தாங்கிய மைந்தனை *

உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே

   

9   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.9

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் *

எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் *

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் *

மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்

   

10   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.10

** செந்நெலார் வயல் சூழ் திருக்கோட்டியூர் *

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை *

மின்னுநூல் விட்டுசித்தன் விரித்த * இப்

பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே

   

11   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.1

** சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி *

கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த *

பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் *

பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே

   

12   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.2

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் *

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் * எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள் *

ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே

   

13   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.3

பணைத்தோள் இளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை *

அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை *

இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் *

கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே

   

14   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.4

உழந்தாள் நறுநெய் ஒரோர் தடாவுண்ண *

இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில்மத்தின் *

பழந்தாம்பால் ஒச்சப் பயத்தால் தவழ்ந்தான் *

முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலையீர் வந்து காணீரே

   

15   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.5

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு *

உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை *

மறங்கொள் இரணியன் மார்பைமுன் கீண்டான் *

குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர் வந்து காணீரே

   

16   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.6

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை *

சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில் *

அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன் *

முத்தம் இருந்த ஆ காணீரே முகிழ்நகையீர் வந்து காணீரே

   

17   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.7

இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனை *

பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடு பரமன்தன் *

நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும் *

மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே

   

18   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.8

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து *

தந்தக் களிறுபோல் தானே விளையாடும் *

நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய *

உந்தி இருந்தவா காணீரே ஒளியிழையீர் வந்து காணீரே

   

19   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.9

அதிரும் கடல்நிற வண்ணனை * ஆய்ச்சி

மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து *

பதறப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த *

உதரம் இருந்தவா காணீரே ஒளிவளையீர் வந்து காணீரே

   

20   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.10

பெருமாவுரலில் பிணிப்புண்டு இருந்து * அங்கு

இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை *

குருமா மணிப்பூண் குலாவித் திகழும் *

திருமார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே

   

21   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.11

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே *

தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் *

வாள்கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் *

தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே

   

22   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.12

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற *

செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை *

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய *

கைத்தலங்கள் வந்து காணீரே கனங்குழையீர் வந்து காணீரே

   

23   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.13

வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் *

கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு *

அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய *

கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே

   

24   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.14

எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு *

அந்தொண்டை வாயமுது ஆதரித்து * ஆய்ச்சியர்

தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும் * இச்

செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழையீர் வந்து காணீரே

   

25   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.15

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் *

நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு *

வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் *

மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழலீர் வந்து காணீரே

   

26   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.16

விண்கொள் அமரர்கள் வேதனை தீர * முன்

மண்கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து *

திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் *

கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர் வந்து காணீரே

   

27   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.17

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய *

திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற *

உருவு கரிய ஒளிமணி வண்ணன் *

புருவம் இருந்தவா காணீரே  பூண்முலையீர் வந்து காணீரே

   

28   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.18

மண்ணும் மலையும் கடலும் உலகேழும் *

உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு *

வண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை *

திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே

   

29   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.19

முற்றிலும் தூதையும் முன்கைம்மேல்  பூவையும் *

சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களை *

பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன் *

நெற்றி இருந்தவா காணீரே  நேரிழையீர் வந்து காணீரே

   

30   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.20

அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு *

கழல்கள் சதங்கை கலந்து எங்கு மார்ப்ப *

மழ கன்று இனங்கள் மறித்துத் திரிவான் *

குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலையீர் வந்து காணீரே

   

31   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.2.21

** சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன *

திருப்பாத கேசத்தைத் தென் புதுவைப்பட்டன் *

விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்

உரைப்பார்போய் * வைகுந்தத்து ஒன்றுவர் தாமே

   

32   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.1

** மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி *

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில் *

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் *

மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ

   

33   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.2

உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ *

இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கினோடு *

விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான் *

உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகமளந்தானே தாலேலோ

   

34   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.3

என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு *

சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு *

இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி *

தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ

   

35   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.4

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் *

அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் *

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் *

செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ

   

36   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.5

எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று *

அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு *

வழுவில் கொடையான் வயிச்சிரவணன் *

தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ

   

37   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.6

ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும் *

சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் *

மாதக்க வென்று வருணன் விடுதந்தான் *

சோதிச் சுடர்முடியாய்  தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ

   

38   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.7

கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் *

வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் *

தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் *

கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ

   

39   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.8

கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை *

உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ *

அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் *

நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ

   

40   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.9

மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் *

செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் *

வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் *

அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்தணையானே தாலேலோ

   

41   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.3.10

** வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட *

அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய *

செஞ்சொல் மறையவர்சேர் புதுவைப் பட்டன்சொல் *

எஞ்சாமை வல்லவர்க்கு  இல்லை இடர்தானே

   

42   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.1

** தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய் *

பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான் *

என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ *

நின்முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப்போ

   

43   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.2

என்சிறுக் குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான் *

தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் *

அஞ்சனவண்ணனோடு ஆடலாட உறுதியேல் *

மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா

   

44   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.3

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் *

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய் *

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற *

கைத்தலம் நோவாமே அம்புலீ கடிதோடிவா

   

45   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.4

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து *

ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண் *

தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே *

மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வாகண்டாய்

   

46   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.5

அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா *

மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் *

குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல் *

புழையில ஆகாதே நின்செவி புகர்மாமதீ

   

47   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.6

தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் *

கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான் *

உண்ட முலைப்பால் அறாகண்டாய் உறங்காவிடில் *

விண்தனில் மன்னிய மாமதீ விரைந்தோடிவா

   

48   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.7

பாலகனென்று பரிபவம் செய்யேல் * பண்டொருநாள்

ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் *

மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் *

மாலை மதியாதே மாமதீ மகிழ்ந்து ஓடிவா

   

49   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.8

சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய் *

சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள் *

சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியைகாண் *

நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்

   

50   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.9

தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய *

பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான் *

ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லை காண் *

வாழ உறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா

   

51   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.4.10

** மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு * இவை

ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் * ஒளிபுத்தூர்

வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை *

எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே