Abhirami Andhadhi


அபிராமி அந்தாதி


    கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை

ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகேழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே

காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே

    
1   நல்வித்தையும் ஞானமும் பெற

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயம் என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே

    
2   பிரிந்தவர் ஒன்று சேர

துணையும் தொழும்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்

பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்

கணையும் கருப்புச்சிலையும் மென் பாசாங்குசமும் கையில்

அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே

    
3   குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்

பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்

மறிந்தே விழு நரகுக்கு உறவாய மனிதரையே

    
4   உயர் பதவிகள் அடைய

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்

குனிதரும் சேவடிக்கோமளமே கொன்றை வார்சடைமேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே

    
5   மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம் மேல்

திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

    
6   மந்திர சித்தி பெற

சென்னியது உன்பொற் திருவடித்தாமரை சிந்தையுள்ளே

மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே

முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே

பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே

    
7   மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்

கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்

மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்

துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே

    
8   பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்

வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

    
9   அனைத்தும் வசமாக

கருத்தன எந்தை தன் கண்ணன வண்ணக் கனகவெற்பில்

பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்

முருத்தனமூரலும் நீயும் அம்மே வந்து என்முன் நிற்கவே

    
10   மோட்ச சாதனம் பெற

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை

என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமறையின்

ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே

    
11   இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்

வான் அந்தமான வடிவு உடையாள் மறை நான்கினுக்கும்

தான் அந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்

கானம் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே

    
12   தியானத்தில் நிலை பெற

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி

பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா

நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த

புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

    
13   வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு

மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

    
14   பெருஞ்செல்வமும் பேரிண்பமும் பெற

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்

சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னை

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே

    
15   தலைமை பெற

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்

மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்

விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ

பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

    

Please leave your valuable suggestions and feedback here