107-ThiruPaarkadal


ThiruPaarkadal ( Vyugam )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 5
ஆண்டாள் திருப்பாவை 1
ஆண்டாள் நாச்சியார் திருமொழி 2
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 2
திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 9
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 4
தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 9
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 2
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி 1
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 2
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 4
நம்மாழ்வார் திருவிருத்தம் 1
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி 2
நம்மாழ்வார் திருவாய்மொழி 6
Total 51

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.3.7

பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற்கடல் வண்ணா உன்மேல் *

கன்றி னுருவாகி மேய்புலத் தேவந்த கள்ள அசுரன் தன்னை *

சென்று பிடித்துச் சிறுக்கைக ளாலே விளங்கா யெறிந்தாய் போலும் *

என்றும்என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனமா வார்களே


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.5

பையர வினணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி *

உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்நான் முகனை *

வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் கால னையும் உடனே படைத்தாய் *

ஐய இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.1.7

வெள்ளை வெள்ளத்தின் மேல்ஒரு பாம்பை மெத்தை யாகவிரித்து * அதன் மேலே

கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காண லாங்கொல்என் றாசையி னாலே *

உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்க ளாய் * கண்ண நீர்கள்

துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய்யான்உன்னைத் தத்துறு மாறே


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.2.10

** அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் *

அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து *

பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை *

பரவுகின் றான்விட்டு சித்தன் பட்டினம் காவற்பொ ருட்டே


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.4.9

** பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு * ஓடிவந்துஎன்

மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ *

தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்றென்று *

உனக்கிடமா யிருக்கஎன்னை உனக்குஉரித் தாக்கினையே


6   ஆண்டாள் – திருப்பாவை – 2

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச் * செய்யும் கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி * நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி *

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் * செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் *

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி * உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்


7   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 2.3

குண்டுநீருறை கோளரீமத யானைகோள்விடுத் தாய் * உன்னைக்

கண்டுமாலுறு வோங்களைக்கடைக் கண்களாலிட்டு வாதியேல் *

வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் கைகளால்சிர மப்பட்டோம் *

தெண்டிரைக்கடற் பள்ளியாய்எங்கள் சிற்றில்வந்து சிதையேலே


8   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 5.7

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால் * என்

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும் *

அங்குயி லேஉனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும் *

தங்கிய கையவ னைவரக் கூவில்நீ சாலத் தருமம் பெறுதி


9   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.8

மாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுந றுந்துழாய் *

மாலையுற்றவ ரைப்பெருந்திரு மார்வனைமலர்க் கண்ணனை *

மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி ரிந்தரங்கனெம் மானுக்கே *

மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே


10   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 4.4

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள் *

கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு *

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து *

செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே


11   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 17

ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர் *

போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தியெண்ணில்

மூர்த்தியாய் * நாகமூர்த்தி சயனமாய்ந லங்கடல்கி டந்து * மேல்

ஆகமூர்த்தி யாயவண்ண மெங்கொலாதி தேவனே


12   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 18

விடத்தவாயொ ராயிரமி ராயிரம்கண் வெந்தழல் *

விடுத்துவீழ்வி லாதபோகம் மிக்கசோதி தொக்கசீர் *

தொடுத்துமேல்வி தானமாய பெளவநீர ராவணை *

படுத்தபாயல் பள்ளிகொள்வ தென்கொல்வேலை வண்ணனே


13   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 23

வானிறத்தொர் சீயமாய் வளைந்தவாளெ யிற்றவன் *

ஊன்நிறத்துகிர்த்தலம ழுத்தினாய் உலாயசீர் *

நால்நிறத்த வேதநாவர் நல்லயோகி னால்வணங்கு *

பால்நிறக்க டல்கிடந்த பற்பநாப னல்லையே


14   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 28

படைத்தபாரி டந்தளந்த துண்டுமிழ்ந்து பெளவநீர் *

படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்த பெற்றியோய் *

மிடைத்தமாலி மாலிமான்வி லங்குகால னூர்புக *

படைக்கலம் விடுத்தபல்ப டைத்தடக்கை மாயனே


15   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 29

பரத்திலும்ப ரத்தையாதி பெளவநீர ணைக்கிடந்து *

உரத்திலும்மொ ருத்திதன்னை வைத்துகந்த தன்றியும் *

நரத்திலும்பி றத்திநாத ஞானமூர்த்தி யாயினாய் *

ஒருத்தரும்நி னாதுதன்மை யின்னதென்ன வல்லரே


16   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 81

கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து *

உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய் *

மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து வேங்கடம் *

அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ


17   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 92

விடைக்குலங்க ளேழடர்த்து வென்றிவேற்கண் மாதரார் *

கடிக்கலந்த தோள்புணர்ந்த காலியாயவேலைநீர் *

படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்து நின்றனக்கு *

அடைக்கலம்பு குந்தவென்னை யஞ்சலென்ன வேண்டுமே


18   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 95

அடக்கரும்பு லன்கள்ஐந்த டக்கியாசை யாமவை *

தொடக்கறுத்து வந்துநின்தொ ழிற்கணின்ற வென்னைநீ *

விடக்கருதி மெய்செயாது மிக்கொராசை யாக்கிலும் *

கடற்கிடந்த நின்னலாலொர் கண்ணிலேனெம் மண்ணலே


19   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 110

தூயனாயு மன்றியும்சு ரும்புலாவு தண்டுழாய் *

மாயநின்னை நாயினேன்வ ணங்கிவாழ்த்து மீதெலாம் *

நீயுநின்கு றிப்பினிற்பொ றுத்துநல்கு வேலைநீர்ப் *

பாயலோடு பத்தர்சித்தம் மேயவேலை கண்ணனே


20   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 3

பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும் *

ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார் * ஞாலத்

தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை * அப்பில்

அருபொருளை யானறிந்த வாறு?


21   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 36

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *

நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்

தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *

அணைப்பார் கருத் தனா வான்


22   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 75

நாக்கொண்டு மானிடம் பாடேன் * நலமாகத்

தீக்கொண்ட செஞ்சடையான் சென்று * என்றும் பூக்கொண்டு

வல்லவா றேத்த மகிழாத * வைகுந்தச்

செல்வனார் சேவடிமேல் பாட்டு


23   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 79

ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை * அன்பினால்

வாய்ந்த மனதிருத்த வல்லார்கள் * ஏய்ந்ததம்

மெய்குந்த மாக விரும்புவரே * தாமும்தம்

வைகுந்தம் காண்பார் விரைந்து


24   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 18

இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே *

தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான் *

கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள் *

பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே


25   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.6

கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு *

ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால் * நமனார்

பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற்கடல்கிடந்தாய் *

நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


26   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.9

ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல் *

தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன் *

தேனுடைக்கமலத்திருவினுக்கரசே திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய் *

நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


27   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.2

** பள்ளியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை *

பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம் *

வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி * நாடொறும்

தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே


28   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.4

கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன் *

பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில் *

துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால் *

செறிமணி மாடக் கொடிகதி ரணவும்  திருவெள்ளி யங்குடி யதுவே


29   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.10.10

** பண்டுமுன் ஏன மாகியன் றொருகால், பாரிடந் தெயிற்றினில் கொண்டு *

தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை *

வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள் *

கொண்டிவை பாடும் தவமுடையார்கள்  ஆள்வரிக் குரைகட லுலகே


30   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.1

** கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை *

மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை *

எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த

வம்மானை * யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே


31   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.8.1

** செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்திருவடியி னிணைவருட முனிவ ரேத்த *

வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின் *

எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து வள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை *

அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே


32   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.7

வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல் *

துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே *

வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்

கள்ளர்போல் * கண்ண புரத்துறை யம்மானே


33   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.1

** மூவ ரில்முன்மு தல்வன் முழங் கார்கட லுள்கிடந்து *

பூவுல ருந்திதன் னுள் புவனம் படைத் துண்டுமிழ்ந்த *

தேவர் கள்நா யகனைத் திருமா லிருஞ்சோலை நின்ற *

கோவ லர்கோவிந் தனைக் கொடி யேரிடை கூடுங்கொலோ


34   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 9

வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய் பேராய் *

கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்

பங்கத்தாய் * பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா *

எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே


35   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 15

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும் *

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும் *

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு *

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே


36   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 25

உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது * எப்போதும்

வரைமேல் மரகதமே போல * திரைமேல்

கிடந்தானைக் கீண்டானை * கேழலாய்ப் பூமி

இடந்தானை யேத்தி யெழும்


37   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 3

பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம் *

புரிவார் புகழ்பெறுவர் போலாம் * புரிவார்கள்

தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து *

நல்லமரர் கோமான் நகர்


38   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 28

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்

நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் * எனைப்பலரும்

தேவாதி தேவ னெனப்படுவான் * முன்னொருனாள்

மாவாய் பிளந்த மகன்


39   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 11

நன்கோது நால்வேதத் துள்ளான் * நறவிரியும்

பொங்கோ தருவிப் புனல்வண்ணன் * சங்கோதப்

பாற்கடலான் பாம்பணையின் மேலான் * பயின்றுரைப்பார்

நூற்கடலான் நுண்ணறிவி னான்


40   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 31

இவையவன் கோயில் இரணியன தாகம் *

அவைசெய் தரியுருவ மானான் * செவிதெரியா

நாகத்தான் நால்வேதத் துள்ளான் * நறவேற்றான்

பாகத்தான் பாற்கடலு ளான்


41   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 32

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும் *

நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல் * பாற்பட்

டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் *

குருந்தொசித்த கோபா லகன்


42   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 61

** பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *

கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *

இளங்குமரன் றன்விண் ணகர்


43   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 79

வேதனை வெண்புரி நூலனை * விண்ணோர் பரவநின்ற

நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை * ஞாலம்தத்தும்

பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும்

சீதனை யேதொழு வார் * விண்ணு ளாரிலும் சீரியரே


44   நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி – 34

பாலாழி நீகிடக்கும் பண்பை * யாம் கேட்டேயும்

காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் * நீலாழிச்

சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும் *

நீதியாய் நிற்சார்ந்து நின்று


45   நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி – 77

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே *

இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம் *

நின்னன்றி மற்றிலேன் கண்டாய் * எனதுயிர்க்கோர்

சொல்நன்றி யாகும் துணை


46   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.5.7

பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும் *

காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும் *

தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும் *

பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம் போரேறே


47   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.6.5

உய்ந்துபோந்தென்னுலப்பிலாத வெந்தீவினைகளைநாசஞ்செய்து * உன்

தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ *

ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை *

சிந்தைசெய்தவெந்தாய் உன்னைச்சிந்தைசெய்துசெய்தே


48   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.7.1

** பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை *

பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை *

பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர் *

பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே


49   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.1.8

மணந்தபே ராயா மாயத்தால் முழுதும் வல்வினை யேனையீர் கின்ற *

குணங்களை யுடையாய் அசுரர்வன் கையர் கூற்றமே கொடியபுள் ளுயர்த்தாய் *

பணங்களா யிரமும் உடையபைந் நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா *

வணங்குமா றாறியேன் மனமும்வா சகமும் செய்கையும் யானும்நீ தானே


50   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.2.8

இடையில் லையான் வளர்த்த கிளிகாள் பூவைகள் காள்குயில் காள்!ம யில்காள் *

உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான் *

அடையும் வைகுந்த மும்பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய *

கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி யவனவை காண்கொ டானே


51   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.8

** திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே *

திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே *

அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே *

ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே