037-ThiruThetriAambalam


Thiru Thetri Aambalam ( Sri Seganmaal Ranganatha Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.1

** மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார்குழையும் * தந்தை

கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் *

நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின் *

சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.2

பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவுகொண்ட பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி *

பெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும் பேணாநஞ் சுண்டுகந்த பிள்ளை கண்டீர் *

நெல்தொடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல் இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்க ணார்தம் *

சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.3

படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப் பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் *

அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்துழலு மையன் கண்டீர் *

மடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கல் வீழ மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி *

திடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.4

வாராரும் முலைமடவாள் பின்னைக் காகி வளைமருப்பிற் கடுஞ்சினத்து வன்தா ளார்ந்த *

காரார்திண் விடையடர்த்து வதுவை யாண்ட கருமுகில்போல் திருநிறத்தென் கண்ணர் கண்டீர் *

ஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி யெங்கும் எழில்மதியைக் கால்தொடா விளங்கு சோதி *

சீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.5

கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை கதிர்முத்த வெண்ணகையாள் கருங்க ணாய்ச்சி *

முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி கண்டீர் *

மலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி ஆடவரை மடமொழியார் முகத்து * இரண்டு

சிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.6

தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள் *

கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர் *

மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு *

தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.7

பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன் *

மங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர் *

கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால் *

செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.8

சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம்

குலுங்க * நிலமடந்தை தனையிடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர் *

இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும் ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும் *

சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.9

ஏழுலகும் தாழ்வரையு மெங்கு மூடி எண்டிசையு மண்டலமும் மண்டி * அண்டம்

மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம் முன்னகட்டி லொடுக்கியவெம் மூர்த்தி கண்டீர் *

ஊழிதொறு மூழிதொறு முயர்ந்த செல்வத் தோங்கியநான் மறையனைத்தும் தாங்கு நாவர் *

சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.4.10

** சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலை *

கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன் கொடிமாட மங்கையர்கோன் குறைய லாளி *

பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார் *

சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச் சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே