021-ThiruSirupuliyur


ThiruSirupuliyur ( Sri Arulmaakadal Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.1

** கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர் *

வெள்ளம்முது பரவைத்திரை விரிய * கரை யெங்கும்

தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்

துள்ளும் * என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.2

தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி மருவி *

பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர் *

திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து *

உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.3

பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர் *

அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால் *

சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத் துறையும் *

இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.4

வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால் *

தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம் *

தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்

தானாயனது * அடியல்லதொன் றறியேனடி யேனே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.5

நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை * நாளும்

எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம் * எறிநீர்ச்

செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து *

அந்தாமரை யடியாய்உன தடியேற்கருள் புரியே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.6

முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி *

கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும் *

செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம் *

தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.7

** சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும் மாயா * எனக்

குரையாயிது மறைநான்கினு ளாயோ *

தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்

தாயோ * உன தடியார்மனத் தாயோவறி யேனே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.8

மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு *

உய்வானுன கழலேதொழு தெழுவேன் * கிளி மடவார்

செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து *

ஐவாய் அர வணைமேலுறை அமலா அரு ளாயே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.9

** கருமாமுகி லுருவா! கனலுருவா! புனலுருவா *

பெருமால்வரை யுருவா! பிறவுருவா! நினதுருவா *

திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து *

அருமாகட லமுதே உன தடியேசர ணாமே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.10

** சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து *

ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை *

காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை *

பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே