029-ThiruvaaliThirunagari


Thiruvaali Thirunagari ( Sri Lakshmi Narashima Perumal Temple )

Azhwar Paasuram Count
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 38
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 1
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 42

1   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.7

ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே *

வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே *

காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே *

ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.1

** அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி * அவுணர்க்

கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது * இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர் *

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.1

** வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும் *

என் சிந்தனைக் கினியாய் திருவே என் னாருயிரே *

அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து * அவை யெங்கும்

செந்தழல் புரையும் திருவாலி யம்மானே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.2

நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல் * அரவணை

வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய் *

சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து * எங்கும்

ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.3

நென்னல்போய் வருமென்றென் றெண்ணி யிராமையென் மனத்தே புகுந்தது *

இம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில் *

செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார் முகத்தெழு வாளைபோய் * கரும்பு

அந்நற் காடணையும் அணியாலி யம்மானே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.4

மின்னில் மன்னு நுடங்கிடை மடவார்தம் சிந்தை மறந்து வந்து * நின்

மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் *

புன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்து * எங்கும்

அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.5

நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும் * என்மனம்

வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா *

பாட லின்னொலி சங்கி நோசை பரந்து பல்பணை யால்மலிந்து * எங்கும்

ஆட லோசையறா அணியாலி யம்மானே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.6

கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர்சேவடி கைதொழுதெழும் *

புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன் *

சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித் தாதி யாய்வரும் *

அந்த ணாள ரறாவணியாலி யம்மானே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.7

உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்து உன் அடியேன் மனம்புகுந்த * அப்

புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகலொட்டேன் *

நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல் தண்டாமரை மலரின் மிசை * மலி

அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.8

சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய் * அருள்புரிந்து

இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ *

கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய் * இளம்

தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.9

ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி நின்னடைந் தேற்கு * ஒரு பொருள்

வேதியர் அரையா உரையாய் ஒருமாற்றமெந்தாய் *

நீதி யாகிய வேதமா முனியாளர் தோற்ற முரைத்து * மற்றவர்க்

காதியாய் இருந்தாய் அணியாலி யம்மானே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.5.10

** புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை *

கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த *

நல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று * தாமுடன்

வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.1

** தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே *

பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே *

தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி *

ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.2

பிணியவிழு நறுநீல மலர்க்கிழியப் பெடையோடும் *

அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே *

மணிகெழுநீர் மருங்கலரும் வயலாலி மணவாளன் *

பணியறியேன் நீசென்றென் பயலைநோ யுரையாயே


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.3

நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நெடுமால் * தன்

தாராய நறுந்துளவம் பெருந்தகையெற் கருளானே *

சீராரும் வளர்ப்பொழில்சூழ் திருவாலி வயல்வாழும் *

கூர்வாய சிறுகுருகே குறிப்பறிந்து கூறாயே


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.4

தானாக நினையானேல் தன்னினைந்து நைவேற்கு * ஓர்

மீனாய கொடிநெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ *

தேன்வாய வரிவண்டே திருவாலி நகராளும் *

ஆனாயற் கென்னுறுநோ யறியச்சென் றுரையாயே


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.5

வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப *

நாணாளும் நின்னினைந்து நைவேற்கு * ஓமண்ணளந்த

தாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த

தோளாளா * என்றனக்கோர் துணையாள னாகாயே


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.6

தாராய தண்டுளவ வண்டுழுத வரைமார்பன் *

போரானைக் கொம்பொசித்த புட்பாக னென்னம்மான் *

தேராரும் நெடுவீதித் திருவாலி நகராளும் *

காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.7

கொண்டரவத் திரையுலவு குரைகடல்மேல் குலவரைபோல் *

பண்டரவி னணைக்கிடந்து பாரளந்த பண்பாளா *

வண்டமரும் வளர்ப்பொழில்சூழ் வயலாலி மைந்தா * என்

கண்டுயில்நீ கொண்டாய்க்கென் கனவளையும் கடவேனோ


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.8

** குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி *

துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ *

முயலாலு மிளமதிக்கே வளையிழந்தேற்கு * இதுநடுவே

வயலாலி மணவாளா கொள்வாயோ மணிநிறமே


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.9

நிலையாளா நின்வணங்க வேண்டாயே யாகினும் * என்

முலையாள வொருநாளுன் னகலத்தால் ஆளாயே *

சிலையாளா மரமெய்த திறலாளா திருமெய்ய

மலையாளா * நீயாள வளையாள மாட்டோமே


22   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.10

** மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி *

நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை *

கையிலங்கு வேல்கலியன் கண்டுரைத்த தமிழ்மாலை *

ஐயிரண்டு மிவைவல்லார்க் கருவினைக ளடையாவே


23   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.1

** கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து *

வள்ளிமருங் குலென்றன் மடமானினைப் போதவென்று *

வெள்ளிவளைக் கைப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று *

அள்ளலம் பூங்கழனி யணியாலி புகுவர்க்கொலோ


24   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.2

பண்டிவ னாயன்நங்காய் படிறன்புகுந்து * என்மகள்தன்

தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை யுகந்து * அவன்பின்

கெண்டையொண் கண்மிளிரக் கிளிபோல்மிழற் றிநடந்து *

வண்டமர் கானல்மல்கும் வயலாலி புகுவர்க்கொலோ


25   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.3

அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய் அரக்கர்க்குலப் பாவைதன்னை *

வெஞ்சின மூக்கரிந்த விறலோந்திறங் கேட்கில் * மெய்யே

பஞ்சியல் மெல்லடியெம் பணைத்தோளி பரக்கழிந்து *

வஞ்சியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ


26   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.4

ஏதுஅவன் தொல்பிறப்பு இளைய வன்வளை யூதி *

மன்னர் தூதுவ னாயவனூர் சொலுவீர்கள் சொலீரறியேன் *

மாதவன் தந்துணையா நடந்தாள்தடஞ் சூழ்புறவில் *

போதுவண் டாடுசெம்மல் புனலாலி புகுவர்க்கொலோ


27   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.5

தாயெனை யென்றிரங்காள் தடந்தோளி தனக்கமைந்த *

மாயனை மாதவனை மதித்தென்னை யகன்றைவள் *

வேயன தோள்விசிறிப் பெடையன்ன மெனநடந்து *

போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர்க்கொலோ


28   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.6

** எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள் *

தன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள் *

வன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும் *

இந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ


29   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.7

அன்னையு மத்தனுமென் றடியோமுக் கிரங்கிற்றிலள் *

பின்னைதன் காதலன்றன் பெருந்தோள்நலம் பேணினளால் *

மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கு மிடையாள்நடந்து *

புன்னையும் அன்னமும்சூழ் புனலாலி புகுவர்க்கொலோ


30   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.8

முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற *

சிற்றில்மென் பூவையும்விட் டகன்றசெழுங் கோதைதன்னை

பெற்றிலேன் * முற்றிழையைப் பிறப்பிலிபின் னேநடந்து *

மற்றெல்லாம் கைதொழப்போய் வயலாலி புகுவர்க்கொலோ


31   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.9

காவியங் கண்ணியெண்ணில் கடிமாமலர்ப் பாவையொப்பாள் *

பாவியேன் பெற்றமையால் பணைத்தோளி பரக்கழிந்து *

தூவிசே ரன்னமன்ன நடையாள்நெடு மாலொடும்போய் *

வாவியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ


32   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.7.10

** தாய்மனம் நின்றிரங்கத் தனியேநெடு மால்துணையா *

போயின பூங்கொடியாள் புனலாலி புகுவரென்று *

காய்சின வேல்கலிய னொலிசெய்தமிழ் மாலைபத்தும் *

மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே


33   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.2

** சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய

மைந்தா * அந்த ணாலி மாலே சோலை மழகளிறே *

நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ * என்

எந்தாய் இந்த ளூராய் அடியேற் கிறையு மிரங்காயே


34   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.2

முந்நீரை முன்னாள் கடைந்தானை * மூழ்த்தநாள்

அந்நீரை மீனா யமைத்த பெருமானை *

தென்னாலி மேய திருமாலை யெம்மானை *

நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே


35   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.6

எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு *

அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை *

நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய் *

மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே


36   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.8

கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே *

பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை *

வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்

பெற்றேன் * பெற்றதும் பிறவாமை பெற்றேனே


37   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.3

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய *

பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய் * மாலை

ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் *

ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே


38   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.7.3

தூயானைத் தூய மறையானை * தென்னாலி

மேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட

வாயானை * மாலை வணங்கி யவன்பெருமை

பேசாதார் * பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே


39   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.8.6

படைநின்ற பைந்தா மரையோடு * அணிநீலம்

மடைநின் றலரும் வயலாலி மணாளா *

இடையன் எறிந்த மரமேயொத் திராமே *

அடைய அருளா யெனக்குன்ற னருளே


40   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 12

நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள் *

நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும் *

அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும் *

எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே


41   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 71

பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர் *

** ஆராமம் சூழ்ந்த வரங்கம்


42   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 115

மன்னிய தண்சேறை வள்ளலை * மாமலர்மேல் 

அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி